தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்

2 mins read
சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த கட்டடம்: 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
3609654b-ef9d-4d24-8b32-8a563126783a
சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகினர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

கோல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கோல்கத்தாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

திங்கட்கிழமை காலைவரை சம்பவ இடத்தில் இருந்து 14 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாயமான மேலும் 6 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கோல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்தார். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருக்கும் ஹக்கீம், இறந்தவர்களின் உறவினர்களுக்கு 5 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் நிவாரணமாக அறிவித்தார்.

மேற்குவங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் கார்டன் ரீச் பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இதனை உரிய அனுமதியின்றியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் சட்டவிரோதமாக கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (மார்ச் 18) அதிகாலை வரை இந்தக் கட்டடத்தில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீட்புப் படையினர் உடனடியாக தங்களது மீட்பு நடவடிக்கைகளைத் துவக்கினர்.

இதில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்.

“மருத்துவம், தீயணைப்பு மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“இந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்துள்ளது. மாநில அரசு சார்பில் இந்த கட்டடம் கட்டுவதற்கான அனுமதி அதிகாரபூர்வமாக வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

“சட்ட விரோதமாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.

“அருகாமையில் உள்ள சில வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. அவர்களுக்கும் அரசு உரிய உதவிகளை வழங்கும்,” என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோல்கத்தா மாநகராட்சியின் மேயராக உள்ள பிர்ஹத் ஹக்கீமின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
விபத்து