தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணை கேட்ட கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

2 mins read
ae7d6a5e-635e-4b0f-868f-d0f0264ddf3f
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகள் கே. கவிதா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிணை பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கே. கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே. கவிதா, டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தமக்குப் பிணை வழங்கக் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்எம் சுந்தரேஷ், பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்னிலை ஆனார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், பிணை பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினர்.

அதுதான் வழக்கமான நடைமுறை என்றும் அதை உச்ச நீதிமன்றம் மீற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி: “டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா சதிச்செயலில் ஈடுபட்டார்.

“மதுபானக் கொள்கைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி பணம் கொடுத்துள்ளார்,” என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என கவிதா கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்