ஆட்டோ பயணத்துக்கு ரூ.7.66 கோடி கேட்ட ஊபர்

ஆட்டோ பயணத்துக்கு ரூ.7.66 கோடி கேட்ட ஊபர்

1 mins read
8faddaa0-a669-47e0-84a4-a489bd821eba
வழக்கமாக ரூ.62 செலுத்தி அவ்வாறு பயணம் மேற்கொண்டதாக வாடிக்கையாளர் தீபக் கூறினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நோய்டாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) காலை, ஊபர் செயலி மூலம் ஆட்டோவிற்குப் பதிவு செய்தார் தீபக் தெங்குரியா எனும் வாடிக்கையாளர்.

வழக்கமாக அத்தகைய பயணத்துக்கு அவர் ஏறக்குறைய 62 ரூபாய் செலுத்துவதுண்டு.

ஆனால் பயணம் முடிவடையவிருக்கும் நேரத்தில் 7.66 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தச் சொன்னது செயலி.

இதுகுறித்து தீபக் தனது நண்பர் ஆஷிஷ் மிஷ்ராவிடம் கலந்துரையாடிய காணொளியை மிஷ்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் பரவும் அந்தக் காணொளியில், தனக்கு 7 கோடியே 66 லட்சத்து 83ஆயிரத்து 762 ரூபாய் (ஏறக்குறைய S$1,256,310) கட்டணம் செலுத்தும்படி செயலி தந்த தகவலைப் படித்துக் காட்டுகிறார் தீபக்.

பயணக் கட்டணம் 1 கோடியே 67 லட்சத்து 74ஆயிரத்து 647 ரூபாய் என்றும் காத்திருப்புக் கட்டணம் 5 கோடியே 99 லட்சத்து 9ஆயிரத்து 189 ரூபாய் என்றும் சலுகைக் கட்டணமாக மொத்தக் கட்டணத்திலிருந்து 75 ரூபாய் கழிக்கப்பட்டதாகவும் செயலியில் தகவல் வந்திருந்தது.

இடையில் எங்கும் நில்லாமல் சென்ற நிலையில் காத்திருப்புக் கட்டணம் எப்படி வந்தது என்று புரியவில்லை என்கிறார் தீபக்.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்த ஊபர் நிறுவனம், இச்சம்பவம் தொடர்பில் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்