இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்- மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்

இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்- மைக்ரோசாப்ட் நிறுவனம் தகவல்

2 mins read
f75cd850-48e8-474f-b6e5-ad6b763de5c4
பொய்யான செய்திகள் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“சீனாவின் ஆதரவு பெற்ற இணையக் குழுக்கள் 2024ல் நடக்கும் பல்வேறு பொதுத் தேர்தல்களை குறி வைத்துள்ளன. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்தத் தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

“இந்த ஆண்டு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென்கொரியாவில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயன் அளிக்கும் வகையில் இதனைச் செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மைக்ரோ சாப்ட் நிறுவன அதிகாரி கருத்துரைக்கையில், “பொய்யான செய்திகள் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்கள் இடையே பரப்பி அவர்களைத் தவறாக வழி நடத்தும்.

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து சீனா சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டுக்கு பெரிய பயனளிக்கும். தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்து உள்ளது. அங்கு போலியான தகவலைப் பரப்பியது,” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காகப் பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

உலக முழுவதும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்