மாணவர் விடுதியில் பெரும் தீ; 8 மாணவர்கள் காயம்

மாணவர் விடுதியில் பெரும் தீ; 8 மாணவர்கள் காயம்

1 mins read
2e0ee400-a282-40cd-8712-59cbcdcec036
75 அறைகள் கொண்ட அந்த மாணவர் விடுதியின் 61 அறைகளில் மாணவர்கள் தங்கியிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: என்டிடிவி

கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மாணவர் விடுதியில் மூண்ட பெரும் தீயில் சிறுவர்கள் எட்டுப் பேர் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் கடுமையான தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மற்றொருவர் தீயிலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்ததில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) 6.15 மணியளவில் தீ மூண்டதாகக் கூறப்பட்டது. மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று முதற்கட்ட விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன.

விபத்தைத் தொடர்ந்து, ஐந்து மாடிகள் கொண்ட அந்த மாணவர் விடுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலகம் கூறியது.

விடுதி நிர்வாகம் பாதுகாப்பு வழிகாட்டிக் குறிப்புகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் தீ விபத்து தொடர்பான தடையின்மைச் சான்றிதழைப் பெறத் தவறிவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டது.

கோட்டாவின் தென், வட பகுதிகளில் அமைந்திருக்கும் ஏறத்தாழ 2,200 மாணவர் விடுதிகள் பாதுகாப்பு வழிகாட்டிக் குறிப்புகளைக் கடைப்பிடிக்காததன் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்