தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவி நிறத்திற்கு மாறிய தூர்தர்ஷன் சின்னம்

2 mins read
ff71937c-ccac-42ab-addf-d0553afbbf84
காவி நிறத்தில் இருக்கும் தூர்தர்ஷன் செய்தி ஊடகத்தின் சின்னம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் வள்ளுவருக்கு காவி உடை, காவி உடை அணிய மறுத்து வெள்ளுடை அணிந்த வள்ளலாரை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேந்தவர் போல சித்தரிப்பது, திருப்பூர் குமரனுக்கு விபூதி பூசுவது என காவி பிரசாரத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த வரிசையில் அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் செய்தி ஊடகத்தின் சின்னத்தை காவி நிறத்தில் மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ‘டிடி நியூஸ்’ தனது டுவிட்டர் பதிவில் ,‘‘டிடி நியூஸ் ஒளிவழி மதிப்பு எப்போதும் போல் தொடர்கிறது. ஆனால் ஒரு புதிய அவதாரத்தில் உள்ளது,’’ என பதிவிடப்பட்டுள்ளது. இது இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி ஒளிவழி) சின்னத்தை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி ஒளிவழிகள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன,” என கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

“ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு ‘நடுநிலையான’ பொதுத்துறை செய்தி ஒளிவழியின் நிறத்தை ஒரு சமயத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும். பிரசார் பாரதி இப்போது ‘பிரசார’ பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. சின்னத்தை மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன,” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்