இவ்வாண்டு ஐஐடி பட்டதாரிகளுக்கு சம்பளம் ரூ.10 லட்சத்துக்கும் குறைவு

1 mins read
25a1fb7a-651f-4318-b103-9eb908ca01ba
கடைசி நிலை மாணவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.10 லட்சத்துக்குக் கீழ் வழங்கப்படுகிறது. - படம்: பிக்சாபே

மும்பை/டெல்லி: பிரசித்திபெற்ற இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பட்டதாரிகளிடையே நல்ல சம்பளம் வழங்கும் வேலைகளைத் தேடுவதற்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஆட்சேர்ப்பைக் குறைத்துக்கொள்வதுடன் குறைந்த சம்பளம் வழங்குவதால், கடைசி நிலை மாணவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.10 லட்சத்துக்குக் கீழ் வழங்கப்படுகிறது.

பொதுவாக அரை டஸன் மாணவர்களைத் தேர்வுசெய்யும் நிறுவனங்கள் இப்போது அதிகபட்சமாக ஓரிரு மாணவர்களையே பணியமர்த்தியுள்ளன. இதனால் கல்லூரிகள் கூடுதல் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அத்தகைய நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்டு சம்பளமாக ரூ.10-15 லட்சம் வழங்குகின்றன.

குறைந்த சம்பளம் வழங்குவதாகக் கருதும் மாணவர்கள், வெளிச் சந்தையில் நல்ல வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“உலகளாவிய பொருளியல் மந்தநிலை, ஐஐடி இந்தூரில் இவ்வாண்டு பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதைக் கணிசமாகப் பாதித்துள்ளது.

“முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆள்சேர்ப்போரின் எண்ணிக்கை குறைந்திருப்பது பெரும் சவாலைத் தந்துள்ளது.

“தாக்கத்தை ஈடுசெய்ய, ஐஐடி இந்தூர் முன்னாள் மாணவர் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதுடன் கூடுதல் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது,” என்று ஐஐடி இந்தூர் இயக்குநர் பேராசிரியர் சுஹாஸ் ஜோஷி கூறினார்.

“கடந்த ஆண்டு வரை ஐந்து முதல் எட்டு மாணவர்களைத் தேர்வுசெய்த நிறுவனங்கள் இவ்வாண்டு ஓரிரு மாணவர்களையே தேர்வுசெய்கின்றன. பலருக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை.

“சிலருக்கு மாதச் சம்பளமாக ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை கிடைக்கிறது,” என்று ஐஐடி பாம்பே மாணவர் ஒருவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்