ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: 24,000 பணிகளை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: 24,000 பணிகளை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடி

2 mins read
64e7fda0-59df-4ab0-a3a5-4280d79e472a
ஆசிரியர் பணி நியமன ஊழலை எதிர்த்து நடந்த பேரணி. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2014 - 2016 வரை நடந்த அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, தகுதித் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மெரிட் பட்டியலில் இடம் பெற்றனர். பலர் வெற்று விடைத்தாள்களை, பெயர், முகவரியுடன் சமர்ப்பித்து, உதவி ஆசிரியர்களாக நியமன ஆணைகளை பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஏராளமான புகார் மனுக்கள் குவிந்தன.

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தில், கூடுதல் நியமனக் குழு முறைகேடாக உருவாக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களையும், இந்தக் குழு தேர்வு செய்துள்ளதாக வழக்கை விசாரித்த சிபிஐயும் குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கின் மீதான விசாரணைகள் கடந்த மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 22ஆம் ) கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்குக்கு தடை கோரிய மனுக்களை மொத்தமாக நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சிபிஐ இவ்விவகாரத்தில் விசாரணையை மேலும் முன்னெடுத்துச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்