மேற்கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவே சிறந்த தேர்வு

மேற்கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவே சிறந்த தேர்வு

2 mins read
f7d48d8e-7466-47c0-9d3a-d8360bb133ed
ஏப்ரல் 15ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள புல்வெளியில் மாணவர்கள் படிக்கின்றனர். - படம்: இபிஏ

வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

செலவு, பாதுகாப்பு குறித்து கவலை நிலவினாலும் பிரிட்டன் (54%), கனடா (43%), ஆஸ்திரேலியா (27%) உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா விஞ்சியது.

திங்கட்கிழமை (ஏப்ரல் 22) வெளியிடப்பட்ட ஆக்ஸ்ஃபர்ட் இன்டர்நேஷனலின் மாணவர் உலகளாவிய நடமாட்டக் குறியீடு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

மாணவர் இடம்பெயர்வில், குறிப்பாக வெளிநாடுகளில் மேற்கல்வியை நாடும் இந்தியர்களிடையே நிலவிவரும் போக்கை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் உயர்தரமே அந்நாடுகளில் மேற்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவதற்கு முக்கியக் காரணம். மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இந்தப் போக்கு ஒத்துப்போகிறது.

குறிப்பாக, அமெரிக்காவைத் தேர்வு செய்வதற்கு 45 விழுக்காட்டு மாணவர்கள் கல்வியின் தரத்தையும் 42 விழுக்காட்டினர் பல்கலைக்கழகங்களின் நற்பெயரையும் சுட்டிக்காட்டினர்.

ஒப்புநோக்க, பிரிட்டனைப் பொறுத்தவரை, 59 விழுக்காட்டு மாணவர்கள் கல்வியின் தரத்திற்கு முன்னுரிமை அளித்தனர். அதே நேரத்தில் 61 விழுக்காட்டினர் பல்கலைக்கழகங்களின் நற்பெயரில் கவனம் செலுத்தினர்.

எனினும், கனடாவைப் பொறுத்தமட்டில், வேலையையும் கல்வியையும் ஒருசேர மேற்கொள்ள முடிவதை மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாகக் கருதுவதாக ஆக்ஸ்ஃபர்ட் இன்டர்நேஷனல் எடுகேஷன் சர்வீசஸ் நிர்வாக இயக்குநர் மோஹிட் காம்பீர் கூறினார்.

வெளிநாடுகளில் படிக்க ஆர்வமுள்ள இந்திய, நைஜீரிய, பாகிஸ்தானிய, வியட்னாமிய மாணவர்கள் இந்தக் கருத்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

வெளிநாடுகளில் மேற்கல்வி பயில்வது தொடர்பில் முடிவெடுக்க தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் உதவுவதாக 71 விழுக்காட்டு இந்திய மாணவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்