வாய் பேச முடியாத மகனை முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிய தாய்; ஒருநாள் கழித்து கிடைத்த உடல்

2 mins read
56e0b81c-ec7a-4c5b-9217-671d47e022f3
உயிரிழந்த சிறுவன் வினோத். - படம்: இந்திய ஊடகம்

தண்டேலி (உத்தர கன்னடா): கர்நாடக மாநிலம், தண்டேலிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் ரவி குமார் ஷெல்லே -சாவித்ரி தம்பதியின் ஆறு வயது மகன் வினோத் பேச்சுத் திறனற்றவன்.

சிறுவனின் குறைபாடு குறித்து ரவி குமார் (27) மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. அப்போதெல்லாம் குழந்தையைத் தூக்கியெறியுமாறு மனைவியைப் பார்த்து கத்துவதுண்டு.

சனிக்கிழமை இரவு (மே 4) சிறப்புத் திறன் கொண்ட குழந்தையின் நிலை குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த 26 வயது சாவித்திரி, தூங்கிக்கொண்டிருந்த மகனை தூக்கிச்சென்று அருகிலுள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசியுள்ளார்.

ஆனால் வீடு திரும்பியதும் மனம்கேட்காத சாவித்ரி தன் மகனை தண்ணீரில் வீசிவிட்டதாகவும் தயவு செய்து அவனைக் காப்பாற்ற உதவுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவனை தேட ஆரம்பித்தனர். தண்டேலி கிராமிய காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு, அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை கடுமையான காயங்களுடன் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. சிறுவனின் உடலில் காயங்களும் ஒரு கை இல்லாமல் இருந்ததும் சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தம்பதி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்