தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுடெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 mins read
5b55c808-81c7-44b2-8b0f-05f1d7e798b3
புதுடெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்குத் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) காலை, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள டெல்லி அரசாங்கப் புற்றுநோய் நிலையம், தாப்ரி வட்டாரத்தில் உள்ள தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்ஜ்வார் மருத்துவமனை, தீப் சந்திர பந்து மருத்துவமனை ஆகியவற்றுக்கு தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.

சில நாள்களுக்குமுன் புதுடெல்லியிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் போக்கு ஆங்காங்கே பதிவாகியுள்ளது.

மே 1ஆம் தேதி டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்திருக்கும் கிட்டத்தட்ட 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பள்ளிகளும் பெற்றோரும் அதனால் பீதி அடைந்தனர்.

மே 6ஆம் தேதி, அகமதாபாத் நகரப் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சல்கள் ரஷ்ய கணினிக் கட்டமைப்புகளிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தேடிப் பார்த்ததில் சந்தேகத்துக்குரிய பொருள் ஏதும் தென்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கும் நகரின் சில மருத்துவமனைகள் உட்பட முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பின்னர் அவை அனைத்தும் போலியான மிரட்டல்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

திங்கட்கிழமை ஜெய்ப்பூரில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்துப் பிள்ளைகள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மோப்ப நாய்களும் வெடிகுண்டு வல்லுநர்களும் பணியமர்த்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்