தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்

2 mins read
பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை; சுற்றுலாத் தம்பதியர் படுகாயம்
976d36af-2097-4cc5-b992-a33b9454e9e2
தாக்குதல் சம்பவங்கள் நடந்த பகுதிகள் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இரட்டைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவற்றில் ஒரு சம்பவத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் ஜம்மு-காஷ்மீரைச் சுற்றிப்பார்க்க வந்த தம்பதியர் காயமடைந்தனர்.

“ஷோபியான் பகுதியில் நடந்த தாக்குதலில் அய்ஜாஸ் அகமது என்பவர் கொல்லப்பட்டார்.

“அனந்த்நாக் பகுதியில் நடந்துள்ள தாக்குதலில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஃபர்ஹாவும் அவரது கணவர் தப்ரேஸும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகள் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

“மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தம்பதியரின் உடல்நிலை சீராக உள்ளது.

“தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தொடர்கிறது,” என்று காஷ்மீர் மண்டலக் காவல்துறை தங்களது சமூக ஊடகப் பக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாமில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தம்பதியர்மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த அரை மணிநேரத்தில் இரவு 10.30 மணியளவில் ஷோபியானில் அய்ஜாஸ் அகமது மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தலின் 5வது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. ஸ்ரீநகர் தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி முடிவடைந்த நிலையில், பாரமுல்லா தொகுதியில் திங்கட்கிழமை (மே 20) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மெகபூபா முப்தி தமது சமூக வலைத்தளப் பக்கத்தில், “எந்த ஒரு காரணமும் இன்றி தேர்தல் வாக்குப் பதிவின்போது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது கடும் கண்டனத்துக்குரியது,” எனக் கூறியுள்ளார்.

பரூக் அப்துல்லா கூறுகையில், “இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை அனைத்து தரப்பினரும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்,” என்றார்.

ஷோபியான் பகுதியில் முன்னாள் கிராமத் தலைவரும் பாஜகவுடன் தொடர்புடையவருமான அய்ஜாஸ் அஹமது சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இரவு 10.36 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக ஏஎன்ஐ ஊடகத்திடம் அய்ஜாஸ் அகமதுவின் சகோதரர் இர்பான் அகமது ஷேக் தெரிவித்தார்.

“அதேநேரம் தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எப்படி தப்பித்துச் சென்றார்கள் என்பதும் தனக்குத் தெரியாது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்