ஹைதராபாத்: நான்கு பிள்ளைகள் இருந்தும் இறந்துபோன தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு எந்தப் பிள்ளையும் முன்வரவில்லை. மாறாக அம்மா வைத்திருந்த சொத்துகளை பங்கு பிரித்தால் யாருக்கு எந்தச் சொத்து என்பதில் வாக்குவாதம். அதனால், அந்தத் தாயின் உடல் மூன்று நாள்களாக தெருவில் கிடந்த பரிதாபச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள நெரேட்சேர்லா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமம்மா (72 வயது). இவர் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றி கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் காலமானார். இவருக்கு 43 வயதில் சைதி ரெட்டி என்ற மகனும், மூன்று மகள்களுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், லட்சுமம்மா இறந்ததும் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து மருத்துவ வாகனத்தில் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே அம்மாவின் சொத்துகளைப் பிரிப்பது தொடர்பாக மூத்த மகனுக்கும் மூன்று மகள்களுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் அம்மாவின் இறுதிச் சடங்குக்கு ஆகும் செலவை பகிர்ந்துகொள்வதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதையடுத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் உடலை அப்படியே விட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
பின்னர் இதில் உறவின்முறையும் ஊர் பஞ்சாயத்தாரும் தலையிட்டு, மகன் ரெட்டிக்குதான் அவரது தாயார் நிறைய பணம் கொடுத்துள்ளார். எனவே, அவர்தான் தகனத்துக்கான முழுச் செலவையும் ஏற்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து ஒருவழியாக அந்தத் தாய்க்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு மீண்டும் அந்த நான்கு பிள்ளைகளும் சொத்துக்காக போட்டுவரும் சண்டை தொடர்வதாகக் கூறப்படுகிறது.

