பெங்களூரு: கர்நாடகா மாநிலம், ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாசக் காணொளிகளை வெளியிட ரூ.100 கோடி தருவதாக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தன்னிடம் பேரம் பேசியதாக வழக்கறிஞரும் பாஜக தலைவருமான ஜி.தேவராஜே கவுடா குற்றஞ்சாட்டி இருந்தார். இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பதிலடி தந்துள்ளார் டி.கே.சிவகுமார்.
“தேவராஜ கவுடாவிடம் நான் ரூ.100 கோடி தருவதாகப் பேரம் பேசியிருந்தால் இதுகுறித்து தைரியமாக அவர் லோக்ஆயுக்தா அல்லது வேறு ஏதாவது சம்பந்தப்பட்ட முகவையில் என்மீது புகார் கொடுக்கட்டும்.
“தேசிய, மாநில ஊடகங்கள் இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கக் கூடாது. சிறையில் இருக்கும் ஒருவர் எப்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறமுடியும்?
“பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக காங்கிரஸ் அரசு பாடுபட்டு வருகிறது. சரியான முறையில் விசாரணை நடந்து வருவதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்,” என்றார்.
வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பாஜக தலைவர் வலியுறுத்து
இதனிடையே, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, “காணொளி விவகாரம் தொடர்பில் பல முக்கியத் தலைவர்களின் பெயர்கள் அடிபடுவதால் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் அந்த வழக்கை வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்கமுடியாது.
“எனவே, இந்தக் காணொளி வழக்கை மாநில அரசு உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்,” என்று வலியுறுத்தி உள்ளார்.
தேவ கவுடா 91வது பிறந்தநாள்: பேரனைச் சும்மாவிடக் கூடாது
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை சும்மா விட்டுவிடக் கூடாது என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
“எங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கும் பிரஜ்வலை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இன்னும் பலர் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.
“சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்,” என்று தனது மௌனம் கலைத்துப் பேசியுள்ளார் தேவகவுடா.

