டேராடூன்: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் செவிலியர் அதிகாரி ஒருவரை கைது செய்ய மருத்துவமனையின் 6வது தளத்திற்குள் ஜீப்பில் புகுந்த காவல்துறையின் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவருக்கு, செவிலியர் பிரிவு அதிகாரி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறையின் எஸ்யுவி வாகனம் நேராக மருத்துவமனையின் ஆறாவது தளத்துக்குச் சென்று, குற்றவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளது, அறுவைசிகிச்சை அறைக்குள் அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்தபோது, பணியிலிருந்த இளநிலை உறைவிட மருத்துவருக்கு, செவிலியர் அதிகாரி சதீஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்த நாள் வாட்ஸ்அப் மூலம் மோசமான செய்திகளையும் அவர் அனுப்பியிருக்கிறார். மேலும், இதனை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார்.
இது குறித்து காவல்துறைக்கு செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சதீஷ் குமார் மீது 354, 506 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதன்கிழமை (மே 23) அன்று கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் குற்றவாளியை நடக்க வைத்துக் கூட்டி வரும்போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் ஆம்புலன்ஸ் செல்லும் அவசரப் பாதையைப் பயன்படுத்தி, காவல்துறையினர் வாகனத்தை 6வது தளத்துக்குக் கொண்டு சென்றனர்.
குற்றவாளி, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தால் விசாரணை முடியும் வரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.