புதுடெல்லி: உள்துறை அமைச்சின் ஒரு பிரிவான இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகளின் பகுப்பாய்வு, சராசரியாக 7,000 இணையக் குற்றம் தொடர்பான புகார்கள் தேசிய இணையக் குற்றப் புகார் தளத்தில் (NCRP) அன்றாடம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான மோசடிகள் கம்போடியா, மியன்மார், லாவோஸ் ஆகிய மூன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நடத்தப்படுவதாக அது குறிப்பிட்டது.
“குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்படும் பல இணையப் பயன்பாடுகள் மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ளதால், இதில் சீனாவின் தொடர்பை நிராகரிக்க முடியாது,” என்று இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் புதன்கிழமை (மே 23) தெரிவித்தார்.
“இந்தியாவைக் குறிவைக்கும் இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளன. அவற்றில் 45% தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் இருந்து, முக்கியமாக கம்போடியா, மியன்மார், லாவோஸ் நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
அந்தத் தரவின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை 7.4 லட்சம் புகார்கள் வந்துள்ளன.
இணையக் கைது மோசடிகளில் இந்தியர்கள் ரூ.120.30 கோடியும், வர்த்தக ஊழலில் ரூ.1,420.48 கோடியும், முதலீட்டு மோசடியில் ரூ.222.58 கோடியும், காதல் மோசடியில் ரூ.13.23 கோடியும் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நாடுகளிலிருந்து நடத்தப்படும் மோசடிச் செயல்களுக்கு போலியான வேலை வாய்ப்புகள் மூலம் இந்தியர்களை கவரும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு இணைய மோசடிகளில் ஈடுபட அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
சீனாவும் இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி வருவதாகவும் கிட்டத்தட்ட 44,000 சீன மக்கள் இந்த நாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும் குமார் கூறியுள்ளார்.