தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேளிக்கைப் பூங்காவில் தீ: சிறுவர்கள் உட்பட 33 பேர் உயிரிழப்பு

1 mins read
மாண்டோரில் பெரும்பாலோர் சிறுவர்கள்
798dc295-5fdf-41d7-92fb-ebfd55647127
ராஜ்கோட்டில் உள்ள இரண்டு மாடிக் கேளிக்கைப் பூங்காவில் தீ மூண்டபோது 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவில் சனிக்கிழமை (மே 25) தீ மூண்டதில் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி’ என்ற பெயரில் இயங்கும் அந்த கேளிக்கைப் பூங்காவில் தீ மூண்டபோது 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்ததாகத் தெரிகிறது.

நுழைவாயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டடம் சரிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக ராஜ்கோட் நகரத் தீயணைப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மின்கோளாற்றால் தீ மூண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.

மாண்டோரின் உடல்கள் மோசமாகக் கருகிய நிலையிலிருப்பதால் உயிரிழந்தோரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.

அன்புக்குரியோரை இழந்து வாடுவோருக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தோர் விரைவில் நலம்பெற வேண்டுவதாகக் கூறினார்.

‘டிஆர்பி’ கேளிக்கைப் பூங்காவின் உரிமையாளரும் மேலாளரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தத் தீச்சம்பவத்தை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் செயல்படும் அனைத்துக் கேளிக்கைப் பூங்காக்களிலும் சோதனை நடத்தும்படி அதிகாரிகளுக்குக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தீப் பாதுகாப்பு தொடர்பான அனுமதி இல்லாமல் இயங்கும் கேளிக்கை நிலையங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்