அய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ரெமல் புயல் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் அய்ஸ்வால் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அந்த மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிலச்சரிவிலும் பாறைகள் சரிந்து விழுந்த சம்பவத்திலும் கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 7 பேர் மிசோரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மூன்று பேர் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று மிசோரம் காவல்துறை இயக்குநர் அனில் சுக்லா பிடிஐயிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஆபத்து உள்ளதால் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள ஹன்தாரில் தேசிய நெடுஞ்சாலை 6ல் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அய்ஸ்வால் மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அதையடுத்து அம்மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து அய்ஸ்வால் மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாறைச் சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ரூ.15 கோடி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் லால்டுஹோமா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு மோசமான நிலையில் உள்ள காரணத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்களைப் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் லால்டுஹோமா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மிசோரமில் புயல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.