கடுமையான வெப்ப அலை வடஇந்தியாவின் பல பகுதிகளைத் தாக்கியதில் 54 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பீகாரில் மட்டும் 32 பேர் மரணமடைந்தனர். அவுரங்காபாத் நகரில் ஆக அதிகமாக 17 பேர் சுருண்டு விழுந்து மடிந்தனர்.
ஒடிசாவில் வியாழக்கிழமை ஏழு மணி நேரத்தில் 10 பேர் வெப்ப தாக்கத்துக்குப் பலியாயினர். அவர்களில் ஆறு பேர் பெண்கள். எஞ்சிய 12 மரணங்கள் ராஜஸ்தான், டெல்லி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நிகழ்ந்தன. ஒடிசா மாநிலத்தில் மாண்ட 10 பேரும் ரூர்கேலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். வியாழக்கிழமை (மே 30) பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8.40 மணி வரை அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
அந்த மாநிலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 44.9 டிகிரி செல்சியஸ். குறிப்பாக, இரும்பு உற்பத்தி நகரமான ரூர்கேலாவில் 46.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாக்கியது.
ஒடிசா மரணங்கள் குறித்து அரசு மருத்துவமனை இயக்குநர் கணேஷ் பிரசாத் தாஜ் கூறுகையில், “உயிரிழந்த 10 பேரில் எட்டுப் பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே உயிரிழந்து விட்டனர். இருவர் சிகிச்சை பலனின்றி மாண்டனர்.
“வெப்பம் தாக்கியதால் அவர்கள் மரணமடைந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. உடல்கூராய்வுக்குப் பின்னர் அது உறுதி செய்யப்படும்,” என்றார்.
பீகாரில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 47.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அங்கு உயிரிழந்த ஒன்பது பேரில் ஐவர் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
சனிக்கிழமை வரை வெப்பத் தாக்கம் தொடரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
தலைநகர் புதுடெல்லியில் வெப்பநிலை இந்த வாரம் 52.9 டிகிரி செல்சியசாகப் பதிவானதாகக் கூறப்பட்டது.
வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் அடுத்த சில நாள்களில் வெப்பநிலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கிழக்குப் பகுதியில் மேலும் இரு நாள்கள் தொடர்ந்து அதிகமாகவே இருக்குமென்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தால் வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை நிலையம் அறிவிக்கும்.
ஒடிசா அரசாங்கம் அதன் ஊழியர்களுக்குக் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.

