இலங்கை பருவ மழை வெள்ளத்தில் 14 பேர் பலி; பள்ளிகள் மூடப்பட்டன

2 mins read
e1481048-0455-4ab8-bb32-c1f8b9d07c17
கொழும்பில் தன் மோட்டார்வண்டியை வெள்ளநீரில் ஓட்டிச் செல்லும் ஆடவர். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: பருவக்காற்று புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் திடீர் வெள்ளம், மண்சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள் காரணமாகக் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) தெரிவித்துள்ளது.

தலைநகர் கொழும்பு அருகே அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட சிலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

11 வயது சிறுமி, 20 வயது இளைஞன் உட்பட மற்றவர்கள் மண்சரிவில் உயிருடன் புதையுண்டதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.

மே 21ஆம் தேதி பருவமழை தீவிரமடைந்தது முதல் அங்குள்ள ஏழு மாவட்டங்களில் மரங்கள் விழுந்ததில் மேலும் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

நீர்ப்பாசனம், நீர்மின்சாரத்திற்காக இலங்கை பருவமழையை நம்பியிருக்கும் அதேவேளையில், காலநிலை மாற்றம் காரணமாக உலகம் வெப்பமடைந்து வரும் சூழலில், இலங்கை அடிக்கடி வெள்ளப்பெருக்கைச் சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய நதிகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் டிஎம்சி தெரிவித்துள்ளது.

கொழும்பின் முக்கிய அனைத்துலக விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் சிறிய விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் சில முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

தொடர்ந்து மழை பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என்றும் டிஎம்சி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்