தெலுங்கானாவில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் பலி

1 mins read
17b5d85f-84f2-43be-ac03-708529c4ed59
கண்ணிவெடி வெடித்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஜெகந்தபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கொங்கல வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றனர். அவர்களில் ஒருவரான இல்லேந்துல ஏசு என்பவர் வனப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் எதிர்பாராமல் மிதித்துள்ளார்.

இதனால் கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் ஏசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மீதமுள்ள 3 பேரும் காயமடையவில்லை. மலையிலிருந்து கீழே இறங்கிய அவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதிகளில் மேலும் சில கண்ணிவெடிகள் இருப்பதாக சந்தேகம் அடைந்து, வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களை எச்சரித்துள்ளனர். காவல்துறையினரின் உதவியுடன் உயிரிழந்தவரின் உடலை மீட்கும் முயற்சியில் ஏசுவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்