கர்நாடகாவைத் தொடர்ந்து, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்திலும் வலுவாகக் காலூன்றியுள்ளது பாஜக. இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது பெரிய வெற்றி. ஆந்திரப் பிரதேசத்தின் 25 தொகுதிகளில் 21ல் பாஜக முன்னிலையில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி 8 இடங்களில் வென்றுள்ளது.
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 412,338 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜக வெற்றிக்கணக்கைத் தொடங்கியுள்ளது.
கேரளாவின் 2016 சட்டமன்றத் தேர்தலில் வென்ற பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் கேரள சட்டமன்றத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற புகழைப்பெற்றார். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் இதுவே பாஜகவுக்கு முதல் வெற்றி.
கடந்த 2019 தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு 28.2% வாக்குகள் பெற்றார். இது 2014 தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.பி.ஸ்ரீசான் வாங்கிய 11.15% வாக்குகளைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்த முறை திருச்சூர் தொகுதியை கைப்பற்ற பாஜக தலைவர்கள் பல வியூங்கள் வகுத்தனர். சுரேஷ் கோபிக்குப் பக்கபலமாக பிரதமர் மோடி திருச்சூரில் பிரசாரம் சென்றதும், கிறிஸ்தவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதும் பாஜகவுக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியது. வெற்றிபெற்றதும், “எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். திருச்சூர் வாக்காளர்கள் பிரஜா தெய்வங்கள்” என்றார் சுரேஷ் கோபி.
இந்த தென் மாநிலங்களிலும் பாஜகவுக்குக் கிடைத்ததுள்ள வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.