புதுடெல்லி: வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வீழ்ச்சியடைந்துவரும் தனிநபர் வருமானம் ஆகியவை நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனிப்பெரும்பான்மை பெறத் தவறியதற்கு முக்கியக் காரணம் என அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், இக்காரணங்களே இந்தியப் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்த வாக்காளர்களையும் அவருடைய கட்சிக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியது என அந்தக் கருத்துக்கணிப்பு கூறியது.
இருப்பினும், மோடியின் தலைமைத்துவம் அவரது கூட்டணிக்கு மற்றொரு ஐந்தாண்டு ஆட்சி காலத்தை வழங்குவதில் வலுவான காரணமாக இருந்தது என அது குறிப்பிட்டது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவை எதிநோக்கியிருப்பது இதுவே முதல் முறை.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் திரு நரேந்திர மோடி புதன்கிழமை (மே 5) அறிவிக்கப்பட்டார்.
இந்திய நாடாளுமன்றம் 543 உறுப்பினர்களைக் கொண்டது. மத்தியில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி 272 இடங்களை வென்றிருக்க வேண்டும். பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றிருந்தது. அதனால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி வாகை சூடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி வழிநடத்திவரும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி 230 இடங்களுக்கு மேல் வென்றிருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பில் குறிப்பிட்டிருந்ததைவிட அதிக இடங்களில் ‘இண்டியா’ கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு நரேந்திர மோடி அதிபர் திரௌபதி முர்முவை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்று பெயர் வெளியிட விரும்பாத தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் 30% வாக்காளர்கள் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதாக லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக ‘தி இந்து’ நாளிதழ் கூறியது.
தேர்தலின்போது இந்தியாவில் இருக்கும் 23 மாநிலங்களைச் சேர்ந்த 20,000 வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பை அந்த நிறுவனம் நடத்தியிருந்தது என நாளிதழ் தெரிவித்தது.
மேலும், தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 32 விழுக்காட்டினருக்கு வேலையில்லாத் திண்டாட்டம் முக்கியக் கவலையாக இருந்தது என்றும் நாளிதழ் குறிப்பிட்டது.

