புதுடெல்லி: டெல்லி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூவரும் கேரளாவில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்.
வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் செயல்படும் ‘ஷயாம் கிருபா ஃபுட்ஸ்’ தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை 3:35 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் மூவர் உயிரிழந்தனர். காயமடைந்த ஆறு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
“தீ மூண்ட சமயத்தில் ஒன்பது பேர் தொழிற்சாலைக்குள் இருந்துள்ளனர். அனைவரையும் மீட்டு நரேலாவில் உள்ள எஸ்ஹெச்ஆர்சி மருத்துவமனையில் சேர்த்தோம். அவர்களில் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்,” என்று காவலர்கள் கூறினர்.
முதற்கட்ட விசாரணையில், எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இறந்தவர்கள் ஷியாம், 24, ராம் சிங், 30, பீர்பா, 42, என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடர்வதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் வீடு தீப்பிடித்ததில் நால்வர் பலி
இதேபோன்ற மற்றொரு தீவிபத்து சம்பவம் கேரள மாநிலத்தின் அங்காடிக்கடவு என்னும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளது. வீட்டில் மூண்ட தீயில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவர்கள் பினிஷ் குரியன், 45, அவரது மனைவி அனுமோல் மேத்யூ, 40, ஜோனா பி குரியன், 8, ஜெஸ்வின் பி குரியன், 5, என அடையாளம் காணப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“சனிக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. நாங்கள் வருவதற்குள் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள படுக்கையறையில் தீயின் வேகம் அதிகரித்து தம்பதியர், இரு குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்களது உடலைத்தான் எங்களால் மீட்க முடிந்தது,” என்று தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் ஆய்வுக்காக வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. பினிஷ் குரியன் தனது வீட்டின் அருகே இயற்கை மசாலாப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
வீட்டின் அருகில் ஒரு கிடங்கும் மசாலாப் பொருள்களை உலர்த்தும் பகுதியும் உள்ளன. மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட உள்ளனர்.

