புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, ஜூன் 10ஆம் தேதி(திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் அவர் கையெழுத்திட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
“விவசாயிகள் நலனுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் பிரதமராக பொறுப்பேற்றவுடன் விவசாயம் சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்தேன். வரும் நாட்களில் விவசாய மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் திரு மோடி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை திங்கட்கிழமை மாலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர்களுக்கான இலாகா குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் நாடாளுமன்ற கூட்டம் நடந்ததாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
இரு அவைகளிலும் பிரதமர் மோடி தனது அரசின் நோக்கம், முன்னுரிமை கொடுக்க உள்ள விவகாரங்களைப் பற்றி குறிப்பிட்டதாகவும் அவை கூறின.

