தமிழகத்தில் போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரின் 500 ஆண்டு பழமையான உலோகத் திருவுருவம், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணங்கியது.
சிலையைத் திருப்பித் தரும்படி பிரிட்டனிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், நான்கு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்திருந்ததாக அந்தப் பல்கலைக் கழகத்தின் ஆஷ்மோலியன் அரும்பொருளகம் தெரிவித்தது. வைணவக் கோயில் ஒன்றிலிருந்து இத்திருவுருவம் களவாடப்பட்டதாகவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வைணவ அடியவரான திருமங்கையாழ்வார் வாழ்ந்த காலம் கிபி 5ஆம் நூற்றாண்டுக்கும் 8 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோழ மண்டலத்தில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் இவர் பிறந்ததாக வைணவ மரபு குறிப்பிடுகிறது.
திருமாலின் பெருமை பாடும் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை உள்ளிட்ட பக்தி இலக்கிய நூல்களை இவர் பாடியுள்ளார்.
முன்னைய பிரிட்டிஷ் பேரரசின்போது பல்வேறு நாடுகளிலிருந்து குவிக்கப்பட்ட அரும்பொருள்களின் வெற்றிகரமான மீட்டெடுப்பில் திருமங்கை ஆழ்வார் திருவுருவத்தின் மீட்பும் அங்கம் வகிக்கிறது. நைஜீரியா, எகிப்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளும் தத்தம் அரும்பொருள்களை தங்களுக்குத் திரும்பத் தரும்படி அனைத்துலகக் கலைக்கூடங்களைக் கோரி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, இத்தகைய இறைத்திருவுருவங்களை இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. 2014லும் 2016லும் நடராஜ சிற்பங்களை இந்தியா முறையே ஆஸ்திரேலியாவிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் உள்ள அரும்பொருளகங்களிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. அதே போல, ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்து பழைய நாலந்தா பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் திருவுருவமும் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்பட்டது.