குவைத் சிட்டி: குவைத்தின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்களில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன் இருவரும் அடங்குவர்.
ராமநாதபுரம் மாவட்டம், தென்னவனூரைச் சேர்ந்த பேரங்காடி ஊழியரான ராமுவின் மரணம் குறித்து அவருடைய உறவினர்கள் தமிழக ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
கோவில்பட்டி அருகே வானரமூட்டியைச் சேர்ந்த மாரியப்பன், குவைத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
தீ விபத்தில் ஐந்து தமிழர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் கூறின. குவைத்தில் செயல்பட்டுவரும் தமிழ் சங்கம் அளித்த தகவலின்படி கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரிஃப், பி.ரிச்சர் ராய் ஆகியோர் உயிரிழந்ததாக அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். எனினும், இது குறித்து இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தவில்லை.
குவைத்தின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்திய நாட்டவர்கள்.
உயிரிழந்தவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கேரள அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் சிலர் ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர்கள். அவர்களில் சிலர் ஆண்டு விடுமுறையில் நாடு திரும்பக் காத்திருந்தனர். காசர்கோடு செர்கலைச் சேர்ந்த கே.ரஞ்சித், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்ப விமான டிக்கெட்டுக்காக காத்திருந்தார்.
“2022ல் வந்தபோது ரஞ்சித் வீடு கட்டினார். இந்த முறை 33 வயதான அவர் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார்,” என்று ரஞ்சித்தின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குவைத் சோகத்தை அடுத்து, வியாழன் அன்று திருவனந்தபுரத்தில் நடக்கவிருந்த வெளிநாட்டிலிருக்கும் கேரள மக்களுக்கான மாநாட்டை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எம்.ஏ.யூசுப் அலி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், வெளிநாடுவாழ் தொழிலதிபர் ரவிப்பிள்ளை தலா ரூ.2 லட்சமும் வழங்குவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதை அந்நாட்டின் தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, வட இந்தியாவை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக குவைத் தடயவியல் துறை கூறியது.
ஆறு மாடிகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். இந்தக் கட்டடம் குவைத் நாட்டைச் சேர்ந்தவருக்குச் சொந்தமானது.
வெளிநாட்டில் வாழும் கேரள தொழிலதிபர் கே ஜி ஆபிரகாமை இயக்குனராகக் கொண்ட கட்டுமான நிறுவனமான என்பிசிடி, அதன் ஊழியர்களை அங்குத் தங்கவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையின்போது குடியிருப்பின் கட்டுமான விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தின் கீழ்தளத்தில் அந்தக் காவலாளி தங்கியுள்ளார். அதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கிட்டத்தட்ட 195 பேர் தங்கி இருந்துள்ளனர். பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். 92 பேர் பத்திரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு வேலை என்பதால் பணிக்கு சென்றுள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் எனத் தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்த காரணத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் உயிரிழந்தனர். சிலர் தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்று உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அல்-அதான் மருத்துவமனைக்கு சென்ற குவைத்துக்கான இந்தியத் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, தூதரகம் சார்பில் முழு அளவில் உதவிகள் செய்யப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.
தீ விபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965-65505246 என்ற உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்தது.

