புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் ‘பர்கர் கிங்ஸ்’ என்ற பிரபல விரைவு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, உணவகத்திற்குள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நபரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. 40 முறை துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஹிமன்சு பாய் பொறுப்பேற்றுள்ளார். போர்ச்சுகலில் தஞ்சமடைந்துள்ள ஹிமன்சு பாய்யும் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவீன் பாலியும் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி, அரியானாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த லாரன்ஸ் பிஷோனி ரவுடி கும்பலுக்கும் ஹிமன்சு பாய் ரவுடி கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது. இதில் ஹிமன்சு பாய் கும்பலை சேர்ந்த சக்தி தாதா என்ற நபரின் கொலைக்கு பழிக்குப்பழி கொலையாக டெல்லி உணவகத்தில் கொலை நடைபெற்றதாக ரவுடி ஹிமன்சு தனது சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

