புதுடெல்லி: வெப்பத் தாக்கத்தால் சாலையோரம் வசித்த 192 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: வெப்பத் தாக்கத்தால் சாலையோரம் வசித்த 192 பேர் உயிரிழப்பு

2 mins read
dab5d37d-fb1a-4a4e-aaa0-e783c11f42fb
வெயிலின் வெப்பம் தாளாமல் வாரணாசியில் கங்கை நதியின் கரையோரம் ஒருவர் உறங்குகிறார். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கொளுத்திய கடும் வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரம் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாள்களில் உயிரிழந்ததாக தன்னார்வ தொண்டு அமைப்பான ‘ஹோலிஸ்டிக் டெவலப்மெண்ட்’ தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “வட மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது,” எனக் குறிப்பிட்டது.

மேலும், “அப்பகுதியில் சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வரும் குடும்பங்கள் இந்த வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் உயிரிழந்துள்ளனர்,” எனத் தான் நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு கூறியது.

இந்த 192 உயிரிழப்புகளும் ஜூன் 11ஆம் தேதிக்கும் ஜூன் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை என்றும் இறந்தவர்களின் உரிமை கோரப்படாத உடல்களில் 80 விழுக்காடு வீடற்றவர்கள் பிரிவை சேர்ந்ததாக உள்ளது என்றும் அது தெரிவித்தது.

இதற்கிடையே, சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் தங்கியிருப்போரை மீட்டு தங்குமிடங்களுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு புதுடெல்லி மாநில அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான உத்தரவை அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சௌரத் பரத்வாஜ் ஜூன் 19ஆம் தேதி பிறப்பித்தார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையால் 40 ஆயிரம் பேருக்கு வெப்ப வாதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெப்ப அலையின் தாக்கம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இன்னமும் நீடிக்கிறது. இந்த வரலாறு காணாத வெப்ப அலையால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வெப்பம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வெப்ப அலை பிரிவுகள் அமைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள நிலைமையை சமாளிப்பதற்கு அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்