பானிபட்: அரியானா மாநிலம் பானிபட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் வலது காலில் காயமுற்ற நோயாளிக்குத் தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அந்த நோயாளி நடக்க முடியாமல் போனது.
அண்மையில் வலது முழங்காலில் காயம் ஏற்பட்ட நோயாளி ஒருவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதற்கு அந்த நோயாளி சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்தது.
ஆனால் வலது முழங்காலுக்கு பதிலாக இடது முழங்காலில் மருத்துவர்கள் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதை அறிந்த நோயாளியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, மீண்டும் மருத்துவர்கள் அந்த நோயாளிக்கு வலது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் தவறுதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அந்த நோயாளியால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அரியானா அரசுக்கும் மாநில காவல்துறை தலைவருக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


