பெங்களூரு: நிதித் தொழில்நுட்ப நிறுவனமான ‘பைன் லேப்ஸ்’, ‘பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ்’ மற்றும் ‘மாஸ்டர் கார்ட்’ நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தியாவில் பங்கு வெளியீட்டின் மூலம் $1.36 பில்லியன் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
அண்மையில், தனது சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களை ஒன்றிணைத்து, அதன் தளத்தை இந்தியாவிற்கு மாற்றுவதற்கான ஒப்புதலை சிங்கப்பூர் நீதிமன்றத்திடமிருந்து ‘பைன் லேப்ஸ்’ நிறுவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு வெளியீட்டில் அந்த நிறுவனம் $8 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டை நாடலாம் எனத் தொழில்துறை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், புதிய பங்குகளையும் இரண்டாம் நிலை பங்குகளையும் அந்த நிறுவனம் வெளியிடலாம் என்றும் எந்தவொரு பங்குப் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாகப் பங்கு வெளியீட்டிற்கான நிதி திரட்டும் முன்னோட்டச் சுற்று ஒன்றையும் நடத்தலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் புளூம்பெர்க் தெரிவித்தவை. அதன் வளர்ச்சி குறித்து ‘பைன் லேப்ஸ்’ நிறுவனம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.