புதுடெல்லி: மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களை அடுத்து மத்திய அரசு விரிவான விசாரணைக்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், “மே 5ஆம் தேதி நாடு முழுவதும் 4,700க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன.
“இதில் 67க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் ஒரே நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“இதனால் நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய கல்வி அமைச்சு இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. 1,563 பேரது கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல அண்மையில் பல்வேறு நகரங்களில் நெட் தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதும் தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதைத் தொடர்ந்து அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த வினாத்தாள் தேர்வு நடப்பதற்கு முன்பு ரூ. 6 லட்சத்துக்கு விற்பனையானதாகக் கூறப்பட்டது.
போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியுள்ள நிலையில் தற்போது சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இரு ஆசிரியர்கள் சிக்கினர்
இந்த நிலையில் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சஞ்சய் துக்ராம் ஜாதவ், ஜலில் உமர்கான் பதான் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

