கவுகாத்தி: வடகிழக்கு இந்தியா மற்றும் அண்டை நாடான பங்ளாதேஷ் முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 3) தெரிவித்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் மூவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மே நடுப்பகுதியில் இருந்து அடுத்தடுத்து பெய்த மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
பங்ளாதேஷில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் புதன்கிழமை அதிகாலை ஒரு ரோஹிங்கியா அகதி உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறைத் தளபதி ஜாஹிருல் ஹோக் பூயான் ஏஎஃப்பி ஊடகத்திடம் தெரிவித்தார்.
பங்ளாதேஷின் சுர்மா நதிக்கரையில் அமைந்துள்ள வடகிழக்கு சில்ஹெட்டில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வசிக்கும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி அபு அகமது சித்திக் கூறினார்.
“அவர்களின் கிராமங்களும் பெரும்பாலான வீடுகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன,” என்று சில்ஹெட் நகரின் அரசாங்க நிர்வாகி அபு அகமது சித்திக் ஏஎஃப்பி ஊடகத்திடம் கூறினார்.
வெள்ளநீரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக சில்ஹெட்டைச் சுற்றி நூற்றுக் கணக்கான நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.