லக்னோ: ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.
காயமடைந்தவர்கள் ஹாத்ரஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.
அப்போது ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
விசாரணைக்குழுவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் தெரிவித்தார்.

