லக்னோ: ஹாத்ரஸ் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான சம்பவம் தொடர்பில் முதல் முறையாக தனது மௌனம் கலைத்துள்ளார் ஆன்மீகச் சொற்பொழிவாளரான போலே பாபா. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், தான் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
“வலியைத் தாங்கும் மனவலிமையைக் கடவுள்தான் தரவேண்டும்,” எனவும் அவர் கூறியிருக்கிறார்.
ஜூலை 2ஆம் தேதியன்று வடக்கு நகரான ஹாத்ரஸ் அருகே நடந்த போலே பாபாவின் சொற்பொழிவைக் கேட்பதற்காக 250,000 பேர் திரண்டதில் 121 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
இந்நிலையில், ஹாத்ரஸ் சம்பவத்துக்குக் காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ், முதன்முறையாக அளித்துள்ள பேட்டியில், “ஜூலை 2ஆம் தேதி நடந்த சம்பவத்துக்குப் பிறகு மிகுந்த கவலையுடன் இருக்கிறேன்.
“குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பமுடியாது என நான் நம்புகிறேன். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம்,” என அவர் வலியுறுத்தி உள்ளார்.
“மிகுந்த வேதனை அளிக்கும் இந்த மோசமான சூழலிலிருந்து மீண்டுவர கடவுள் நமக்கு சக்தி அளிக்க ண்டும். அனைத்தையும் விசாரித்து வரும் உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
“விசாரணையில் இறங்கியுள்ள அனைத்து உறுப்பினர்களும் அதிகாரிகளும் நியாயம் வழங்குவார்கள்.
“உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் நலனில் உடன் இருப்பதாக வழக்கறிஞர் டாக்டர்.ஏ.பி.சிங் மூலமாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“தற்போதைக்கு அரசின் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அனைவரது கடமை,” எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வை நடத்தியதில் சம்பந்தப்பட்ட ஏழு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஹாத்ரஸ் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுகர், டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்பிய காணொளியில், பேரழிவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக போலே பாபா கூறியிருந்தார்.
ஜூலை 4ஆம் தேதி ஏஎஃப்பி ஊடகத்திடம் பேசிய பாபாவின் வழக்கறிஞர் காவல்துறையினரிடம் இருந்து தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று கூறினார். ஆனால், பாபா இருக்குமிடத்தை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏறக்குறைய 250,000 பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்விற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டு இருந்ததை விடவும் இது மூன்று மடங்கு அதிகம்.
பாபாவின் வழக்கறிஞர் கூட்ட நெரிசலுக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள மலை உச்சியில் உள்ள கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் 224 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உபி காவல்துறையின் சாதாரணக் காவலராக இருந்த சூரஜ் பால் ஜாத்தவ், ஒரு பாலியல் வழக்கில் கைதானதால் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். தனது சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலையானவர் தம் பெயரை நாரயண் சாக்கா விஷ்வ ஹரி என மாற்றிக்கொண்டார்.
தனது சொந்த கிராமமான பட்டியாலாவில் ஆன்மிகப் பிரசாரங்களை நடத்தி வந்தவரை கிராமவாசிகள் போலே பாபா என அழைக்கத் துவங்கினர்.
தொடர்ந்து உ.பி., ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட ஆசிரமங்களையும் அமைத்துக்கொண்டார்.

