பிரபல பாப் பாடகர் உஷா உதுப் கணவர் காலமானார்

2 mins read
85b75518-93f6-448b-9320-42583478bdb6
ஜானி ஜாக்கோ மற்றும் உஷா உதுப். - படங்கள்: தி இந்து

புதுடெல்லி: பிரபல பாப் பாடகர் உஷா உதுப்பின் கணவர் ஜானி ஜாக்கோ மாரடைப்பு காரணமாக ஜூலை 8ஆம் தேதி திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. ஜானியின் இறுதிச்சடங்கு கோல்கத்தாவில் ஜெய்ரோடாலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உஷா உதுப் கோல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திங்கட்கிழமை காலை வழக்கம்போல் அவர் வீட்டில் தன் கணவர் ஜானியுடன் உணவருந்தியுள்ளார். பிறகு வேலை நிமித்தமாக உஷா உதுப் மட்டும் வெளியில் கிளம்பிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திலேயே அவரது கணவர் ஜானிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஜானி ஜாக்கோவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஜானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஜானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜானியின் மறைவை ஒட்டி உஷா உதுப்புக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். மும்பைவாழ் தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த உஷா, கடந்த 1969ல் சென்னையிலிருந்து தனது மேடைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். உஷாவை ஜானி ஜாக்கோ 1960ல் முதன்முறையாக கோல்கத்தாவில் சந்தித்துள்ளார். அப்போது அந்நகரில் உஷா உதுப் பாப் பாடகராகப் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிகளுக்கு அஞ்சலி மற்றும் சன்னி என இரு குழந்தைகள் உள்ளனர். உ‌ஷா உதுப் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

தமது இசை உலகின் சாதனைக்காக அண்மையில் உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்