ஹைதராபாத்: தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செரிலிங்கம்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரிகேபுடி காந்தி, ஜூலை 13ஆம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரது முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.
அரிகேபுடி காந்தியுடன் சேர்த்து இதுவரை 9 பிஆர்எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். அக்கட்சியில் இருந்து மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் விலகி காங்கிரசில் சேர திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் ரேவந்த் ரெட்டியும், அரிகேபுடி காந்தியும் நண்பர்கள். தெலுங்கானா உருவான பிறகு 2014 சட்டமன்றத் தேர்தலில், இருவரும் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரிகேபுடி காந்தி, தேர்தலுக்குப் பின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்குச் (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) சென்றார். எனினும், தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரேவந்த் ரெட்டி பின்னர் காங்கிரசில் சேர்ந்தார்.
அரிகேபுடி காந்தியுடன் பெருநகர ஹைதராபாத் முனிசிபல் மாநகராட்சியின் பிஆர்எஸ் கட்சி கவுன்சிலர்களான செரிலிங்கம்பள்ளி கவுன்சிலர் நாகேந்தர் யாதவ், மியாபூர் கவுன்சிலர் உப்பலாபதி ஸ்ரீகாந்த், சந்திராநகர் கவுன்சிலர் மஞ்சுளா ரகுநாத் ரெட்டி, ஹைதர்நகர் கவுன்சிலர் நார்னே சீனிவாஸ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
பிஆர்எஸ் கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கவுட், அண்மையில் பாரத் ராஷ்டிர சமிதியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார். அவர் காங்கிரசில் சேர்ந்த ஒருசில நாட்களில், சனிக்கிழமை ஒன்பதாவது பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினராக அரிகேபுடி காந்தி காங்கிரசில் இணைந்துள்ளார்.