பீகாரில் பள்ளிகள், வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

பீகாரில் பள்ளிகள், வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

2 mins read
605dc539-590e-4be5-928c-d0bd53ba32bd
முசாபர்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. - படம்: ஏஎன்ஐ

முசாபர்பூர்: பாக்மதி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தின் 18 பஞ்சாயத்துகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இங்குள்ள பல பள்ளிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

“பாக்மதி ஆற்றில் தண்ணீர் பெருகும்போது ​​பள்ளியில் இதுபோன்று வெள்ளம் ஏற்படுகிறது. பள்ளிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் நிற்கிறது. அதிகாரிகளின் உத்தரவுப்படி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,” என்று பள்ளி ஊழியர் ஒருவர் சனிக்கிழமை கூறினார்.

பாரி, பஸ்கட்டா ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமவாசி ஒருவர் கூறுகையில், “நாங்கள் தண்ணீரில் நின்றபடி உணவு தயாரிக்கிறோம், குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். வீட்டில் தண்ணீர் நிரம்பியுள்ளது, பாம்புகளுக்கும் பயப்படுகிறோம், ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அரசு நிர்வாகத்தினர் இங்கு வந்துள்ளனர்,” என்றார்.

“எங்கள் வீட்டிற்குள் நான்கு நாள்களாக வெள்ளம் புகுந்துள்ளது. அடுப்பு நீரில் மூழ்கிவிட்டது, குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காக எப்படியாவது நாங்கள் உணவு செய்து தருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தின்போது இந்த நிலை ஏற்படுகிறது,” என்று மற்றொரு கிராமவாசி கூறினார்.

இதுகுறித்து கட்ரா பகுதியைச் சேர்ந்த அலுவலர் மதுமிதா குமாரி கூறுகையில், “பாக்மதி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. ஊராட்சிகளைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஐந்து படகுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

“பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தயார் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் தொடர்பாக நிர்வாகம் முழு உஷார் நிலையில் உள்ளது. மேலும் அணையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததும் அதனைச் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்