திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மின்தூக்கிக்குள் 59 வயது ஆடவர் ஒருவர் இரண்டு நாள்களாக சிக்கிக்கொண்டு அவதிப்பட்டார்.
திருமலை அருகே உள்ள ஒரு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவரான ரவீந்திரன் நாயர், சனிக்கிழமை மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை காலை பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக பொறியாளர்கள் மின்தூக்கியைத் திறந்தபோது அதில் நாயர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடல் நலிவுற்ற நிலையில் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று நாயரின் குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்ததாக தகவல்கள் கூறின.
அவரது கைப்பேசி பழுதடைந்ததால், மின்தூக்கியில் இருந்தபடி யாருடனும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.