டெல்லி மருத்துவமனையில் நோயாளியை சுட்டுக்கொன்ற இளையர்: GTB மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டெல்லி மருத்துவமனையில் நோயாளியை சுட்டுக்கொன்ற இளையர்: GTB மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

2 mins read
d2613bfb-53df-4954-bb9f-1889b8a27eaa
டெல்லி அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வரை நாங்கள் எங்கள் கடமைகளைத் தொடரமுடியாது என்று கூறி ஜிடிபி மருத்துவமனை மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.   - படம்: பிடிஐ ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனை வார்டுக்குள் இருந்த 32 வயது நோயாளி ஒருவர் இளையரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இளையர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து நாட்டில் உள்ள இதர மருத்துவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த ஒரு அலட்சியமான செயலும் இனிமேல் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது,” என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

ஜிடிபி மருத்துவமனையின் வார்டுக்குள் மருத்துவர்கள், உறவினர்களின் முன்னிலையில் நோயாளி இளையரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உயிரிழந்த ரியாசுதீன், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடிவயிற்றில் ஏற்பட்ட தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை அறிக்கையின்படி, ரியாசுதீனுக்கு ஜூன் 24ல் அறுவைசிகிச்சை நடந்துள்ளது.

மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவலர்கள், நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவர்கள் நீண்டகாலமாக தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், டெல்லி அரசாங்கம் இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்துவருவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டிய கட்டாயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பான சூழலை வழங்கும்படி நாங்கள் பலமுறை கோரியுள்ளோம். ஆனால், எங்களின் முறையீடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு இப்போது துயரச் சம்பவத்தில் முடிந்துள்ளது.

“டெல்லி அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வரை எங்களால் கடமைகளைத் தொடரமுடியாது. வேலைநிறுத்தம் தொடரும்,” என்று மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வேலைநிறுத்தத்தின்போது அவசரச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபெடரேஷன் ஆஃப் ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் (ஃபோர்டா) இந்தச் சம்பவத்தை “மாஃபியா கொலை போன்றது” என வர்ணித்துள்ளது.

“இந்தச் சம்பவம் மருத்துவர்களுக்கான மேம்பட்ட பாதுகாப்பின் அவசரத் தேவை குறித்து அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது,” என ஃபோர்டா தலைவர் அவிரல் மாத்தூர் கூறினார்.

“அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடுவது அவசியம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்