உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
d865bd5e-312d-4988-b559-a58698e23109
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணம் செய்திருப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 4.28% அதிகரித்துள்ளது. மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76% பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு 15.2 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த நிலையில், 2022ல் அது 12.32 கோடியாக இருந்தது. ஆண்டுவாரியாக இது 23.36% வளர்ச்சியாகும்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விமான இருக்கைகளை முன்பதிவு செய்து பின்னர் பயணிகளால் ரத்து செய்யப்பட்ட விகிதம் மே 2024ல் 1.7%ஆக இருந்தது.

இத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதன் காரணங்களையும் குறிப்பிடுகின்றன. அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக 39.6% பேரும், விமானச் செயல்பாடுகள் காரணமாக 23% பயணிகளும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16.4% பயணிகளும், இன்ன பிற காரணங்களுக்காக 19.5% பயணிகளும் முன்பதிவு செய்த விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.

எனினும், விமானப் போக்குவரத்துத் துறையில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருப்பது விமானப் பயணத் தேவை அதிகரிப்பையும், நேர்மறையான நம்பிக்கையையும் குறிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வளர்ச்சியானது, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த பலன் என விமானப் போக்குவரத்துத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்