புதுடெல்லி: இந்தியாவில் ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக ஒன்பது கைப்பேசி ‘சிம்’ அட்டைகளையே இனி வைத்திருக்க முடியும்.
ஒரு ஆதார் அட்டைக்கு 9 ‘சிம்’ அட்டைகள் தற்போது அனுமதிக்கப்படுகின்றன. அதற்கு மேல் சிம் அட்டைகளை வைத்திருந்தால், முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.50,000 அபராதமும், அடிக்கடி மீறுபவர்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். சட்டவிரோத வழிகளில் சிம் அட்டையைப் பெறுவோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதமும், மூன்றாண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு, ஒருவருக்கு ஆறு சிம் அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
‘சிம்’ அட்டை மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கும் விதமாக ஒருவர் வைத்திருக்கும் சிம் அட்டைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்புச் சட்டம் 2023ன் கீழ் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சட்டம் ஜூன் 26ஆம் தேதி நடப்புக்கு வந்துள்ளது.
கைப்பேசி எண்கள் மூலமாக பல மோசடிகளைச் செய்துவிட்டு, மோசடிக்குப் பயன்படுத்தும் சிம் அட்டைகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய அட்டைகள் மூலம் மோசடி செய்வோரை முடக்க நாடு முழுவதும் ஒருவர் பயன்படுத்தும் சிம் அட்டைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த சட்டம், அதிகபட்சமாக சிம் அட்டைகளை பயன்படுத்தினால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யவில்லை என்றாலும், சிம் அட்டைகள் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு ஒருவர் சிம் அட்டையைத் தவறான பயன்பாட்டுக்காக வாங்கி, மோசடியில் ஈடுபட்டால், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஒருவேளை, ஒருவர் பெயர் வேறுயாராவது சிம் அட்டைகளைப் பெற்றிருந்தால், அதனை அறிந்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://sancharsaathi.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிம் அட்டைகளின் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
மேலும் புதிய தொலைத்தொடர்பு சட்டம் அவசர காலங்களில் எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை அல்லது கட்டமைப்பையும் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர அனுமதிக்கிறது. பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது குற்றங்களைத் தடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தொலைத்தொடர்பு சேவைகளை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.
செய்தி நோக்கங்களுக்காக மாநில, மத்திய அரசுகளில் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் அனுப்பும் செய்திகளுக்கு கண்காணிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும். செய்தி அறிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டால், அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களின் அழைப்புகளும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படலாம்.
புத்தாக்கம், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு வசதியாக சட்ட கட்டமைப்பையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.