கேதார்நாத்: உத்தராகண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
அதனால், கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் கவுரிகுண்ட் மற்றும் சிர்பஸா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில், கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
மூன்றாவது நபர் ருத்ரபிரயாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
எட்டுப் பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
“நான் தொடர்ந்து மீட்புப் படையினருடன் தொடர்பில் இருந்துவருகிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மேம்பட்ட சிகிச்சையை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்,” என்றார் அவர்.

