புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்திற்கான கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. முதல் நாளான நேற்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான பொருளியல் ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில், 2025ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பிரச்சினைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள், சீரற்ற பருவமழை ஆகியவற்றால் பணவீக்கம் பாதிக்கப்பட்டபோதிலும், நிர்வாக, பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அதை சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது எனப் பணவீக்கம் குறித்து பொருளியல் ஆய்வறிக்கை தெரிவித்தது. 2023ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.7 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024ஆம் நிதியாண்டு 5.4 விழுக்காடாக குறைந்துள்ளது என அது மேலும் கூறியது.
உலகளாவிய நிச்சயமற்ற பொருளியல் நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இயல்பான பருவமழையின் எதிர்பார்ப்பு, இறக்குமதி பொருள்களுக்கான விலைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவை மத்திய ரிசர்வ் வங்கியின் நிலையான பணவீக்க கணிப்புகளுக்கு நம்பகத்தன்மை அளிப்பதாகவும் ஆய்வறிக்கை சொன்னது.
“நிதி நிர்வாகத்தில் இந்தியா சிறந்த சமநிலையை அடைவதற்கு, வரி இணக்க ஆதாயங்கள், செலவினக் கட்டுப்பாடு, மின்னிலக்க மயமாக்கல் ஆகியவை உதவுகின்றன. குறுகிய கால பணவீக்க கண்ணோட்டம் கடுமையாக இருக்காது. ஆனால் பருப்பு வகைகளில் தொடர்ச்சியான பற்றாக்குறையையும் அதன் விளைவாக விலை உயர்வு தொடர்பான அழுத்தத்தையும் இந்தியா எதிர்கொள்கிறது,” என ஆய்வறிக்கை தெரிவித்தது.
தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றன, நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன உள்ளிட்ட பல அம்சங்கள் 476 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய தொழிலாளர் சந்தை கடந்த ஆறு ஆண்டுகளில் மேம்பட்டுள்ளன என்றும் வேலையின்மை விகிதம் 2022-23ஆம் நிதியாண்டில் 3.2 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.