ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை கேத்தி காவல் நிலையம் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நீரின்றி இருந்த அணைகள் தற்பொழுது வேகமாக நிரம்பி உள்ளன. இங்கு உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பலத்த காற்று, மழையால் மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுகின்றன. தொடர்ச்சியாக பல மரங்கள் வீழும் நிலையில் அம்மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்படைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் மழை ஒருபக்கம் சீரமைப்பு பணிகள் மறுபக்கம் என வேலைகள் நடந்து வருகின்றன. விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்து நிலைமை மோசமடைந்துள்ளது. காற்று, மழையின் தீவிரம் குறையாததால், மரங்கள் சாய்வது நிலச்சரிவு ஆகியவற்றால் அபாய நிலை நீடிக்கிறது.
கேத்தி காவல் நிலையம் மீது பெரிய கற்பூர மரம் வியாழக்கிழமை விழுந்தது. இதில் காவல் நிலைய கட்டடம் சேதமடைந்தது. மேலும், மரம் அருகில் இருந்த மின் கம்பம் மீது சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தச் சாலையில் போக்குவரத்தும் பாதிப்படைந்தது. இதுபற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘‘எதிர்பாராத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
மழையால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக அமைச்சர், மக்களவை உறுப்பினர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம். மீட்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன’’ என்றனர்.