புதுடெல்லி: இந்தியப் பழங்குடி மொழிகளைக் கற்க உதவும் 25 அடிப்படை நூல்கள் திங்கட்கிழமை (ஜூலை 29) தலைநகர் புதுடெல்லியில் வெளியீடு காணவுள்ளன.
இந்த நூல்களை, இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் (சிஐஐஎல்), தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (என்சிஇஆர்டி) ஆகியவை பதிப்பித்துள்ளன.
இந்தியப் பழங்குடி மொழிகளின் அடிப்படை எழுத்துகளைக் கற்பிக்கும் வகையில் இந்நூல்கள் அமைந்துள்ளன.
சுமார் 100 பக்கங்களைக் கொண்ட இந்நூல்களில் வட திராவிட மொழியான கொலாமி தெலுங்கு மற்றும் கோண்டி ஒடியா ஆகியவற்றுடன் வடகிழக்கு மாநிலப் பழங்குடிகளின் மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நூல்கள் நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளன.
இதுவரை அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகள் மட்டுமே மத்திய அரசின் ஆதரவோடு வளர்ச்சி பெற்று வந்தன.
இப்போது அப்பட்டியலில் இடம்பெறாத பழங்குடி, மலைவாழ் மக்களின் மொழிகளும் மத்தியக் கல்வித் துறையின் கவனத்தைப் பெற்று, வளர்ச்சி பெற்று வருகின்றன.
இதையொட்டி திங்கட்கிழமை வெளியாகும் நூல்கள், ஒளி-ஒலிப் பதிவுகளாகவும் விரைவில் வெளியாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டெல்லி மானெக்ஷா அரங்கில் நடைபெறும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.