புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள மேலும் 13 இந்திய நிர்வாகச் சேவைத் (ஐஏஎஸ்) தேர்வுப் பயிற்சி நிலையங்களில் கீழ்த்தளங்களை டெல்லி நகராட்சி மன்றம் ஜூலை 28ஆம் தேதியன்று மூடியது.
ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.35 மணி அளவில் டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, பயிற்சி நிலையத்தின் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது மேலும் ஐந்து பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
பயிற்சி நிலையத்தின் கீழ்த்தளத்தில் மழைநீர் நிரம்பியதை அடுத்து, அங்கிருந்து வெளியேற முடியாமல் மூன்று மாணவர்கள் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தப் பயிற்சி நிலையத்தில் குறைந்தது 30 மாணவர்கள் இருந்ததாகவும் அவர்களில் 12லிருந்து 14 மாணவர்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் வெள்ளத்திலிருந்து தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நிரம்பியிருந்து நீர் விசைக்குழாய் மூலம் வெளியேற்றப்பட்டது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மாணவர்களை இந்தியாவின் தேசிய பேரிடர் நிர்வாகப் படையின் முக்குளிப்பாளர்கள் மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தை வாகன நிறுத்துமிடமாகவோ அல்லது பொருள்களை அடுக்கி வைப்பதற்கான இடமாகவோ மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தை அப்பயிற்சி நிலையம் நூலகமாக மாற்றி அமைத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், கீழ்த்தளத்தைச் சட்டவிரோதமாக நூலகமாகப் பயன்படுத்திய பயிற்சி நிலையத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
பயிற்சி நிலையம் செய்த தவறுக்கு மூன்று மாணவர்கள் மாண்டுவிட்டதாகவும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஜூலை 28ஆம் தேதியன்று அவர்கள் குரல் எழுப்பினர்.
இதுபோன்ற பயிற்சி நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்ததை அடுத்து, வெள்ளம் ஏற்பட்ட பயிற்சி நிலையத்தின் கீழ்த்தளத்தையும் மேலும் 13 இந்திய நிர்வாகச் சேவைத் தேர்வுப் பயிற்சி நிலையங்களின் கீழ்த்தளங்களையும் டெல்லி நகராட்சி மன்றம் மூடியது.
இதற்கிடையே, பயிற்சி நிலையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளம் ஏற்பட்டு மூவர் இறந்ததைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி, ஜூலை 29ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு வெளியே திரண்ட பாஜகவினர், டெல்லியை ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
“இது விபத்தல்ல, கொலை,” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பாகஜ தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார்.