புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை தொடர்பான வழக்கில் மூன்று கைதிகள் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இப்போது செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் அவர்களின் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
மாம்பழத்திற்காக சிறுவர்கள் போட்டுக் கொண்ட சண்டையில் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் கழிகளால் தாக்கிக் கொண்டனர். அந்தச் சண்டையில் ஒரு சிறுவனின் தந்தை விஸ்வநாத் என்பவர் உயிரிழந்தார்.
1984ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், அலகாபாத் விசாரணை நீதிமன்றம் 1986ஆம் ஆண்டு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்தத் தண்டனையை 2022ஆம் ஆண்டு உறுதி செய்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இப்போது தீர்ப்பு வழங்கி உள்ளது.
அந்தத் தீர்ப்பில், “இந்த வழக்கின் சூழ்நிலை மற்றும் உண்மைத்தன்மை, உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றைப் பரிசீலித்ததன் அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை இல்லை என்றும் மரணம் விளைவித்த குற்றம் என்றும் மனுதாரர் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது.
எனவே, குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆயுள்தண்டனை, 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் மூவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.