தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

2 mins read
6b217b3a-960f-48c6-a4f6-c82213fa7397
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த சட்டத் திருத்த மசோதாவில் வக்ஃபு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதையடுத்து இந்த மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால், “இந்த சட்டத் திருத்த மசோதா கூட்டாட்சி முறை மீதான வலிமையான தாக்குதல்.

“வக்ஃபு சொத்துகள் தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணிகளை மாநிலங்கள் கவனித்துக் கொள்கின்றன. இந்த மசோதா அனைத்துத் தரவுகள் சேகரிக்கும் பணியையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லும். இது மதச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்,” என்று திரு வேணுகோபால் தெரிவித்தார்.

இந்த மசோதா தொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி மொஹிபுல்லா, “மற்ற மதத்தினரின் சட்டப்பூர்வ அமைப்புகளில் அந்தந்த மதத்தினர் மட்டுமே பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் எனும்போது, ஏன் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது. முதல் வக்ஃபு வாரியம் மெக்காவில் உள்ளது. அது குறித்தும் கேள்வி எழுப்புவோமா? இது ஒரு பெரிய தவறு. இதற்கான விலையை நாம் பல நூற்றாண்டுகளுக்கு கொடுக்க வேண்டி இருக்கும்” என எச்சரித்தார்.

இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமல்ல, கூட்டாட்சி மற்றும் மத சிறுபான்மையினருக்கும் எதிரானது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, முக்கியமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வக்ஃபு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தில் தலையிடும் நோக்கம் இதில் இல்லை என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் உறுதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்