தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி முகவர்கள் குறித்து நியூயார்க் இந்திய தூதரகம் எச்சரிக்கை

2 mins read
20e51bfa-9b2a-47a9-babe-ec281b0b8822
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணையத்தளம். - படம்: நியூயார்க் இந்தியத் தூதரகம்

புதுடெல்லி: தூதரகச் சேவைகளுக்கு அதிக கட்டணம் கேட்கும் போலி முகவர்கள் குறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தகைய முகவர்கள் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நியூயார்க் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி விசா, கடப்பிதழ்கள், ஓசிஐ அட்டைகள், அவசரச் சான்றிதழ்கள் போன்றவற்றை செய்துதர அளவுக்கு அதிகமான கட்டணங்களைக் கேட்பதாக அத்தூதரகத்தின் தலைமை அதிகாரியான கொன்சுல் ஜெனரல் பினயா பிரதன் கூறினார்.

சில வேளைகளில் போலி முகவர்கள் ஓர் அவசரச் சான்றிதழை வழங்க 450 டாலர் (595 வெள்ளி) வரை கட்டணம் கேட்பதாகத் தெரிய வந்துள்ளது. அந்தச் சான்றிதழைப் பெற 22.49 வெள்ளி கட்டணம் செலுத்தினால் போதும்.

சில போலி முகவர்கள், தங்களை நாடிவந்தோருக்குத் தெரியாமல் போலி அடையாள ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்ததும் தெரிய வந்துள்ளது. அதனால் நடைமுறைகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பம் செய்வோர் அமெரிக்க சட்டத்தை மீறும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிட்டது.

இந்திய சமூகத்தினர், முகவர்களை நாடத் தேவையில்லை என்றும் தங்களுக்குத் தேவையான தூதரகச் சேவைகளைப் பெற தூதரகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் திரு பிரதன் சொன்னார்.

அத்தகைய சேவைகளை வழங்குவதாகச் சொல்லும் போலி மின்விசா இணையத்தளங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. சரியான இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே மின்விசாவுக்கு விண்ணப்பம் செய்யுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.

நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம், அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்களில் வசிப்போருக்கான சேவைகளை வழங்குகிறது. அம்மாநிலங்களில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். அந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் இருக்கும் மொத்த இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கையில் 40லிருந்து 45 விழுக்காடாகும்.

அமெரிக்காவில் 354,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 113,000க்கும் அதிகமானோர், அமெரிக்காவின் 10 வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்